RSS

இரண்டாவது குழந்தைப் பேறா.... கவனியுங்கள் பெற்றோரே..!

வீட்டில் இரண்டாவது குழந்தை பிறப்பென்பது வேறு விதமான சந்தோஷத்தை உருவாக்கும். முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு இடைவெளி என்பது முக்கியமான் கேள்வி.
கண்டிப்பாக முதல்குழந்தையை சுமந்த கர்ப்பப்பை திரும்பவும் சீராகும் வரை காத்திருக்க வேண்டும். முதல்குழந்தையின் தாய்ப்பால் தேவை முடிவுறும் வரை பொறுக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் இடைவெளி.
இரண்டாவது கருவுற்றிருப்பதை முதல்குழந்தைக்கு எப்போது கூறவேண்டும்? சில பெற்றோர் அடுத்த குழந்தைக்கு தயாராகும் போதே பகிர்ந்து கொள்ள நினைக்கிறார்கள். இவ்வாறு கூறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. ஏதோ காரணத்துக்காக கருவுறவில்லை என்றால் குழந்தையின் ஏமாற்றத்தை சமாளிப்பது எப்படி? முதல்குழந்தைக்கு 6-7 வயது தாண்டியிருந்தால் வேறு ஏதாவது பேசும்போது, இப்போது உனக்கு ஒரு தம்பியோ, தங்கையோ இருந்தால் இந்த விசயத்தை எப்படி…, என்பது போல கேட்கலாம். அதிலிருந்து முதல்குழந்தையின் ஆர்வத்தை புரிந்து கொள்ளலாம். சில வேளைகளில் குழந்தைகளிடம் நேரடியாகவே, உனக்கு தம்பி அல்லது தங்கை வேண்டுமா? என்றும் கேட்பதுண்டு.
குழந்தையை பொறுத்தவரை தம்பி – தங்கை என்றால் விளையாடுவதற்கு ஒரு தோழனோ, தோழியோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். சிறிய குழந்தை உன்னைவிட இத்தனை வருடங்கள் எப்பொழுதும் குறைவாக இருக்கும். உன்னுடன் சரிசமமாக சில ஆண்டுகள் விளையாட முடியாது. அதன் பின் உனக்கு ஈடு கொடுக்கலாம் என்ற உண்மையை நாம்தான் மூத்த குழந்தைக்கு சொல்ல வேண்டும். பொதுவாக கருவுற்று 3 மாதங்கள் சென்றபிறகு கூறுவது சிறந்தது. குழந்தைகள் இருவருக்கும் வயது இடைவெளி எப்போதுமிருக்கும் என்பதை விளக்கிவிட்டு, குட்டிக் குழந்தையை எப்படிப்பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிய வைப்பது நல்லது.
இதனை முதல்குழந்தையின் பழைய புகைப்படங்கள் மூலமாகவோ, மற்ற சிறிய குழந்தைகளைக் காட்டியோ எப்படி முதல்குழந்தையை ரசித்தோம் என்பதைக் கூறலாம்.
பிரசவத்தின்போது எவ்வளவு ஆவலாக குழந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம் என்று உணர்த்த வேண்டும். பிறக்கும்போது முதல்குழந்தை எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது என்பதைப் பற்றியும் பேசவேண்டும். பின்னர் எவ்வாறு தாய்ப்பால் கொடுத்து வளர்த்தோம் என்பதையும் ரசிக்கும்படியாக பெருமையுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
முதல்குழந்தை எவ்வளவு வயதானாலும் தாய்க்கும் தந்தைக்கும் பதவி உயர்வு கொடுத்தது அதுதான் என்பதைப் பெருமையாகப் பேசவேண்டும். இவ்வாறு பற்பல வழிகளில் முதல்குழந்தை சிறந்தது என்பதை உணர்த்த வேண்டும். வரப்போகும் குழந்தை முதல் குழந்தையின் சொத்து என்பதைக் கூறவேண்டும்.
ஆனால் ஒருபோதும் உனக்காகத்தான் நான் இந்தக் கர்ப்பத்தைச் சுமக்கின்றேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது. பசுமரம் போன்ற குழந்தையின் மனதில் இந்தக்குழந்தைக்கும் தான் தான் பொறுப்பு போன்ற பெரிய விஷயத்தைத் திணிக்கக்கூடாது. எனக்கு துணைவேண்டும் என்றுதானே நம் அம்மா அப்பா கஸ்டப்படுகிறார்கள் என்பது போன்ற பச்சாத்தாபங்களைத் தூண்டிவிடுவது குழந்தையை வதைப்பதற்குச் சமன்.
தாயின் வயிற்றில் குழந்தை வளர வளர, 4வயதுக்கும் மேற்பட்ட முதல் குழந்தைகள் கவலைப்படத் தொடங்குவதை பார்க்கலாம்.
எப்பொழுதும் தாய் பக்கத்திலேயே இருக்கவேண்டும் என்ற காரணத்தினால் பள்ளிக்கூடாம் போகாமல் இருக்கும் குழந்தைகளும் உண்டு. எனக்க்குப் பயமாக இருக்கின்றது, அம்மாவின் வயிறு வெடித்துத்தானே குழந்தை வெளியே வரும், அம்மாவிற்கு ஒன்றும் ஆகிவிடாதே பொன்ற கவலை இந்தப் பிஞ்சு மனதில் நிலவுகிறது. இதற்குக் காரணம் இவர்கள் முன்னிலையில் பிரசவம் என்றால் மறுஜென்மம் போன்ற பழைய கருத்துக்கள் பேசப்படுவதும், பிரசவவலி பற்றி மற்றவர்களிடத்தில் பகிர்வதும், தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் மூலம் அவள் பிரசவத்தினால் உயிரிழந்தாள் போன்ற வசனங்கள் காதில் விழுவதும்தான்.
இன்றைய காலகட்டத்தில் பிரசவத்தில் உயிரிழப்பது அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவால் மட்டுமே. காலாகாலத்தில் மருத்துவ ஆலோசனைப்படி நடந்துகொண்டால் இந்த அசம்பாவிதத்தைப் பெரிதளவு தடுக்கலாம். அதோடு, பிரசவ வலியைக் குறைப்பதற்கும் வழிமுறைகள் உள்ளன.
இந்த அறிவை உபயோகித்து முதல் குழந்தையை தயார்ப்படுத்த வேண்டும். வயிறு வெடிக்காது, உள்ளே குழந்தை வளருவதற்கு இடமில்லாதபோது, குழந்தை 280 நாட்கள் கழிந்த பிறகு அம்மாவிற்கு சிறிய வலி தொடங்கும், அப்படித் தோன்றிய உடனே மருத்துவமனையில் அம்மாவை அனுமதிக்க வேண்டும், அங்கே வலியைச் சமாளிக்கக்கூடிய மருந்துகள் கொடுப்பார்கள் அம்மாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள், பின்னர் குழந்தை அம்மாவுக்கு தொல்லை தராமல் நிதானமாக வெளியே வரும் என்ற உண்மையைக் கூறவேண்டும்.
இவ்வாறு தயார் செய்தால், தாயை மருத்துவமனைக்குள் அனுமதிக்கும்போது, முதல்குழந்தை கவலையில்லாமல் தம்பி அல்லது தங்கையின் வருகைக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலைமையை ஏற்படுத்தலாம்.
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் முதல்குழந்தைக்கு காட்டவேண்டும், ஸ்பரிசிக்க கற்றுத்தரவேண்டும். தலையிலோ, கால்களிலோ முத்தம் கொடுக்க அனுமதிக்க வேண்டும். நான் தூக்கலாமா? என்று கேட்கும்போது பெரியவர் உதவியுடன் மடியில் சற்றுநேரம் வைக்கலாம். பின்னர் இரண்டாம்குழந்தைக்கு முதல்குழந்தையின் முன்னிலையிலேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
ஆரம்பத்திலிருந்தே முதல்குழந்தையின் மனதில் எழக்கூடிய கேள்விகளை சமாளிக்கத் தெரிந்து வைத்திருந்தால் இரண்டாவது பிரசவமும், இரண்டாவது குழந்தையின் வரவும் சுகமானதே.....!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

0 கருத்துகள்: