RSS

குழந்தை வளர்ப்பு:குழந்தைகள் பயப்படாதவாறு சூழலை மாற்றுங்கள்!

Mould your Children Ease out of Fear - Child Care Tips and Informations in Tamil

குழந்தைகள் கொள்ளை அழகு. ஆனால் குழந்தைகளை எழில் குறையாமலும், மனம் வாடாமலும் வளர்ப்பது எளிதானதல்ல. குழந்தைகளுக்கு இந்த உலகமே புதியதாகத் தெரிவதால் ஆர்வம் மிகுந்த பார்வையால் எப்போதும் துறுதுறுவென பார்த்துக் கொண்டிருப்பார்கள். எதையும் தொட்டுப் பார்க்க விரும்புவார்கள்.
நெருப்பு சுடுமென்று அறியாமலே அதைத் தொட்டுப் பார்க்க விரும்புவதும், உடைகள் தொல்லை தருவதாக எண்ணி களைந்து எறிய விரும்புவதும், பிறப்புறுப்புகளை வினோதமானதென்று எண்ணி தொட்டுப் பார்க்கும் விஷயங்களும் அவர்கள் அறியாமல் செய்பவை.
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது சில விஷயங்கள் குழந்தைகளுக்கு பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்திவிடும். உதாரணமாக குழந்தைகள் செய்யக் கூடாத விஷயத்தை செய்வதைப் பார்த்து நீங்கள் காட்டுக்கூச்சல் போட்டால் அது என்னவோ ஏதோவென்று அரண்டுவிடும்.
முதல்முறையாக பள்ளிக்கு அனுப்பும்போது ஆசிரியரைக் கண்டு பயப்படலாம், பாடம் படிப்பதை சுமையாக கருதலாம், சக மாணவர்களோடு பழக கூச்சம் கொண்டு பதட்டம் அடையலாம்.
முதலில் குழந்தைகள் எதற்காக பீதி, பயம்கொள்கிறார்கள் என்று கவனித்து அறிந்துகொள்ள வேண்டும். பிறகு அமைதியான சூழலில் அவர்களை அமர வைத்து அதற்கான காரணங்களை புரியும்படியாக விளக்க வேண்டும். அத்தகைய பீதி எண்ணங்கள் தேவையற்றது என்பதை புரிய வைக்க வேண்டும். பயத்தை திசைதிருப்பும் வகையில் செயல்படக் கூடாது.
உதாரணமாக குழந்தைகள் பொருட்களுக்கு தீ வைத்து விளையாடுவதாக வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு தீயின் குணங்களையும், அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் புரியும்படியாக விளக்க வேண்டும். இந்த விஷயத்தை அவர்கள் புரிந்து கொண்டால் மீண்டும் தீ வைத்து விளையாடுவதை நிறுத்திவிடுவார்கள்.
பயம் காரணமாக பள்ளிக்கு செல்ல அடம்பிடித்தால் கல்வியின் அவசியத்தை விளக்க வேண்டும். "அப்பா எப்படி என்ஜினீயரானார், நீ அக்காவைப் போல நன்றாகப் படிக்க வேண்டாமா" என்று அவர்களின் எண்ணங்களை படிப்பை நோக்கி திசைமாற்ற வேண்டும். பள்ளியில் பிரச்சினை என்றால் ஒரு சிலமுறை அவர்களுடன் பள்ளிக்குச் சென்று அவர்கள் பயம்கொள்ளும் சூழலை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
குழந்தை நாய்களுக்குப் பயப்படுவதாக வைத்துக்கொள்வோம். அந்த நாய்கள் திரியும் வழியாக அழைத்துச் சென்று இதற்குப் பயப்படத் தேவையில்லை என்று விளக்கலாம். இருட்டான பகுதியைக் கண்டு பயந்தாலோ, தனிமையில் இருக்க அச்சம் அடைந்தாலோ, பேய்க்கதைகள் போன்றவற்றைக் கேட்டு மிரண்டு போயிருந்தாலோ அதுபோன்ற சூழலை உருவாக்கி "இங்கு (இருட்டிற்குள்) பயப்படும் விதத்தில் ஒன்றும் இல்லை, டி.வி.யில் வருவது கதைதான், அதற்காக பயப்படக்கூடாது" என்று விளக்கி மாற்றம் ஏற்படச் செய்யலாம்.
குழந்தை பள்ளிக்கு செல்ல வேண்டியது அவசியமானது. ஆனால் குழந்தைக்கு பள்ளிக்குச் செல்ல ஆசை இருந்தும் மற்றவர்களின் துன்புறுத்தலுக்கு அஞ்சி பள்ளிக்கு போக மறுத்தால், அந்தக் காரணத்தை அறிந்து அதை களைய முயல வேண்டும்.
வளர் இளம் பருவத்தில் பெண் குழந்தைகளை யாரும் பின் தொடர்வதாலோ, கிண்டல் செய்வதாலோ குழந்தைகள் அந்தச் சூழலை வெறுக்கலாம். பள்ளி செல்லவும் மறுக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் குழந்தைக்கு இடையூறு செய்பவர்களை கண்டிப்பது, குழந்தைகளை மாற்றுவழியில் செல்ல வைப்பது, தாமே பள்ளி வரை அழைத்துச் செல்வது போன்றவை சரியான வழிமுறைகளாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

0 கருத்துகள்: