RSS

மரணத்தின் பின்னரான வாழ்க்கை

மரணத்துக்குப் பின்னரான வாழ்வு 2011 julaiஅண்மையில் அப்பப்பாவின் இறுதிக் கிரிகைகள் முடிந்த பின்னர் அவரது புத்தக அலுமாரியை அலசியதில் கிடைத்த புத்தகங்களில் ஒன்று மரணம் பற்றிய விசாரணைகளை மீளக் கிளறி விட்டிருந்தது.

எனது வயதை ஒத்த மஞ்சரி இதழில்(1978) வெளிவந்த தொடர்கட்டுரைகளை தொகுத்து உருவாக்கப்பட்டிருந்தது அச்சிறிய புத்தகம். ‘உடலை விட்ட பின்’ என்ற தலைப்பிடப்பட்ட டாக்டர் ரேமாண்ட்.ஏ.மூடி என்ற அமெரிக்கரின் ஆய்வுகளைச் சொல்லும் இக்கட்டுரை தமிழில் எம்.எஸ். பிரகாஷ் என்பவரால் எழுதப்பட்டிருந்தது.

இதனை முதன்முதலில் எனது பதின்நான்காவது வயதில் வாசித்துப் பார்த்து, பயந்த ஞாபகம் இன்றும் பசுமையாக இருக்கிறது. அப்போது இது என் அப்பாவின் புத்தக அலுமாரியில் புதுமுக புத்தகமாக இருந்தது. இத்தனை இடப்பெயர்வு, கந்தளாய்க்குள உடைப்புகள் தாண்டி மீண்டும் என்கரம் சேர்ந்திருக்கிறது.

கட்டுரை பலரது அனுபவங்களைக் கோர்வைகளாகக் கொண்டிருக்கிறது.அதில் தலையில் அடிபட்டுச் செத்துப்பிழைத்த ஒருவர் சொல்கிறார் ‘அடிபட்ட இடத்தில் ஒருவிநாடி பயங்கரமாய் வலித்தது. அடுத்த விநாடி வலியெல்லாம் எப்படியோ மறைந்துவிட்டது. ஓர் இருண்ட வெளியில் நான் மிதந்து கொண்டிருப்பதுபோல் இருந்தது. அன்று ஓரே குளிர். ஆயினும் நான் இருண்ட வெளியில் மிதந்துகொண்டிருக்கும் போது குளிரே தெரியவில்லை. நான் இதற்கு முன் அநுபவித்தறியாத கதகதப்பான சுகமான உணர்வு எழுந்தது. நான் செத்துப்போய்விட்டேன் என்பதுபோல் இருக்கிறது என்றுதான் நினைத்துக் கொண்டேன்.


ஒரு கார்விபத்தில் செத்துப் பிழைத்தவர் சொன்னது, ‘குறுக்கே வந்த கார் மோதியதும் நான் எங்கோ அடைக்கப்பட்ட இருண்ட வெளியில் வேகமாய்ச் செல்வதுபோல் இருந்தது. திடீர் என்று நான் ஐந்தடி உயரத்தில் அந்தரத்தில் மிதந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் காரைச்சுற்றிக் கூட்டம் கூடுவதையும், என்னுடன் காரில் வந்த என் நண்பன் அதிர்ச்சியுடன் காரின் இடிபாடுகளிலிருந்து எழுந்து தள்ளாடிக்கொண்டு வருவதையும், என் உடம்பு இடிபாடுகளிடையே சிக்கி இருப்பதையும், அதை வெளியில் எடுக்க சிலர் முயல்வதையும் பார்த்தேன்'.

என்று தொடர்ந்து செல்லும் பலரது மரண அனுபவம், அன்று பயமாகவும் இன்று வாசிக்கையில் சுவாரிஷ்யமாகவும் இருக்கிறது.


இதன்பின்னர் மறைமலை அடிகளார் எழுதிய ஆவிகள் தொடர்பான புத்தகத்தையும் இன்னும் பல பெயர் மறந்துபோன புத்தகங்களையும் வாசித்து, பல ஆவி உலகம் சார்ந்த திரைப்படங்களையும், புகைப்படங்களையும் , செய்திகளையும் தேடிப் பார்த்ததும், படித்ததும் ஞாபகம் வருகிறது.


இவற்றின் தூண்டுதலால் பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து நடுநிசியில் மயானத்தில் சிறிய ஒலிப்பதிவுக் கருவியை வைத்து பரிசோதனையில் ஈடுபட்டதும் உண்டு. எனினும் அவற்றில் பறவைகளினதும், வண்டுகளினதும் மற்றும் காற்றின் அசைவுகளினதும் ஒலிகள் தவிர்த்து வேறேதும் வித்தியாசமானவொன்றும் பதியப்படாமல் ஏமாற்றம் தந்ததும் வேறுகதை.

அதன்பின்னர் ஆவிகளுடன் பேசுபவர்களுடன் தொடர்புகொண்டபோது, நாங்கள் இதனை விஞ்ஞானரீதியாக பரிசோதிக்க முயல்கிறோம் என்பதை அவர்கள் ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டதனால் அம்முயற்சியும் தொடராமல் போனது.

பின்னர் வாழ்வு பல்கலைக்கழகத்துள் சிறைப்பட்டு அதற்குள்ளும் பல்வேறு பரிணாமத்தை கொண்டமைந்ததில் இவையெல்லாம் மறந்துபோயிருந்தது.

என்னினம் மரணங்களாலும், அதுபற்றிய செய்திகளாலும் ,வதந்திகளாலும் நிறைந்திருக்கின்ற இக் காலப்பகுதியில் மரணத்தின் பின்னரான வாழ்வு பற்றிய எண்ணங்களை இப்புத்தகம் மீள துளிர்க்கவிட்டிருக்கிறது. மனித வாழ்வு பலமர்ம முடிச்சுக்களைக் கொண்டிருக்கிறது. அவற்றின் தேடலும், ஆராய்வுகளும் பலவேறுபட்ட விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும். அவற்றால் வாழ்வின் சுவாரிஷ்யம் மிக்க இன்னோரு பக்கம் நமக்கு திறந்து காட்டப்படுகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

0 கருத்துகள்: