RSS

2011 அன்று இடம்பெற்ற கொடியேற்ற திருவிழா

நலூர் கந்தன் தேர்த்திருவிழா 2011
தெற்கு வீதியில் அமைந்துள்ள புதிய கோபுரமருகே ஆரோகணிக்கும் காட்சி
அடியார்களின் பக்திக் கடலில் சித்திரத் தேரினில் மிதந்து  வரும்  நல்லைக் குமரன்.

'முருகா என்றழைக்கவா... முத்துக்குமரா என்றழைக்கவா...' எனப் பாடி புகழ்லேந்தப்படும் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் முருகப் பெருமான் இன்று தேர் ஏறிவருகின்றான்.

முருகன் என்றால்'அழகன்' என்று பொருள். நல்லூரில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் தமிழ்க் கடவுளாக தமிழர்கள் செறிந்து வாழும் வடபகுதியில் குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலித்து வருகின்றான்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் இன்று 27 ஆம் திகதி தேர்த்
திருவிழா. உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான முருகப்பெருமான் தம்மை வழிபடும் அடியார்களின் துன்பங்களையும் துயரங்களையும் இன்னல்களையும் இடுக்கண்களையும் நீக்கியருளும் பொருட்டு இந்த நல்லூரிலே கோயில்கொண்டு எழுந்தருளி வீற்றிருக்கின்றான்.

புனித நகராம் நல்லூரிலே அருள்பாலிக்கும் அழகன் முருகப்பெருமானுக்கு நடைபெறுகின்ற வருடாந்த மஹோற்சவத்திலே ரதோற்சவம் சிறந்ததொன்றாகும். சிவ பெருமானுடைய நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளாக உருவெடுத்து சரணவணபொய்கையிலே ஆறு குழந்தைகளாக வந்து உமையவளால் ஆறுமுகங்களோடு இந்த உலகம் உய்ய உதித்தவன் முருகன்.

சிவபெருமானுக்கும் முருகனுக்கும் பேதமில்லை. இருவரும் ஒன்று தான். ஆதலின் 'நமது சக்தி ஆறுமுகன்' என்கிறது கந்தபுராணம். ஆகவே சிவபெருமான் தான் சூரபத்மனாதியோரை அழித்து தேவர்களைக் காக்கும் ஆறுமுகக்கடவுளாக அவதரித்து அருள்பாலித்துள்ளார்.
அத்தகைய அருள் நிறைந்த முருகப்பெருமான் இன்று நல்லூரில் இரதோற்சவத்தில் ஆரோகணிக்கின்றார். புனித நகராம் அருள்கொழிக்கும் இந்த நல்லூர்ப்பதியில் சரித்திரப் பெருமை வாய்ந்த சிறப்புமிகு தலமாகும். சைவமும் தமிழும் தழைத்தோங்கிவளரத் தம்மையே அர்ப்பணித்தவரான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்த இடமான இந்த நல்லூர் சங்கிலியன் ஆட்சியில் இராசதானியாக இருந்திருக்கின்றது. அவனுடைய ஆட்சியிலே இந்த நல்லூர் பீடும் பெருமையும் கொண்டு மிக்க சிறப்புடன் விளங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன.

இத்தகைய இந்த நல்லூர் முருகன் கோவில் கொண்டு அருள்பாலிக்கின்ற தலமாக விளங்குவது தமிழ் மக்களுக்கெல்லாம் மிகுந்த பெருமையை அளிக்கின்றது. தமிழ்பேசம் மக்களின் தருப்பெரும்தெய்வமான தமிழ்க்கடவுள் முருகனுக்கு கோலாகலமாகத் தேர்த்திருவிழா நடைபெறுகின்றது.
அழகன் முருகன் ஆறுமுகப்பெருமானாக அழகிய சித்திரத்தேரில் ஆரோகணித்து வருகின்ற அருட்காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அடியார் பெருமக்களாகிய ஜன சமுத்திரத்தின் நடுவே தங்கரதம் ஆடி அசைந்து வருகின்ற போது ''அரோகரா... முருகனுக்கு அரோகரா'' என்று கோஷமிடுகின்ற அடியவரைச் சொல்லவா! அழகன் முருகன் ஷண்முகப் பெருமானாக ஸ்ரீவள்ளி தேவசேனாதிபதியாக எழுந்தருளித் தேரில் வருகின்ற அருட்பவணி பற்றிச் சொல்லவா!

எங்கு திரும்பினாலும் அடியார் கூட்டம். ''முருகா! முருகா!'' என்று கூறிய வண்ணம் தேரில் வருகின்ற முருகனை ஒரு கணம் நேரில் தரிசித்திட வேண்டும் என்ற அவாவுடன் முண்டியடித்துக் கொண்டு முருகனின் தேரை நோக்கிப் படையெடுக்கின்றார்.

இன்னொரு புறம் முருகனுடைய நாமங்களை உச்சரித்தபடி பஜனைக்கோஷ்டிகள் வந்துகொண்டிருக்கின்றன. காவடிகள் தூக்கிவரும் அடியவர்கள் ஆடிப்பாடிக்கொண்டு வருகின்றனர். தேரின் பின்னே அங்கப்பிரதட்சணம் செய்யும் அடியார்கள் நீண்ட வரிசையிலே உருண்டு வருகின்ற இப்படியான பக்திமயமான தெய்வீகக்காட்சி வேறு எங்குமே காண முடியாது.

தேர்வடம் பிடித்து இழுத்து வருகின்ற அடியார்களின் பக்திமயமான கோஷம் வானைப்பிளக்கும் நல்லூர் முருகனின் தேர்வடம் பிடித்திழுத்தால் சொர்க்கத்திலே ஓரிடம் பிடிக்கலாம் என்று இடித்துத்தள்ளிக்கொண்டு வரும் அடியவர் முகங்களில் எத்தனை பிரகாசம்.

இன்று நல்லூரிலே காணுகின்ற காட்சிகள் யாவும் பக்திமயமானவை. ஷண்முகப்பெருமானுடைய அழகுத் தோற்றத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் அடியார் கூட்டம் அலை மோதுகின்றது. தூக்குக் காவடிகள் பல முருகனின் வீதிகள் தோறும் வந்து கொண்டிருக்கின்றன.பெண் அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும் பாற்காவடி எடுத்தும் அடியழித்தும் தமது நேர்த்திகடன்களையெல்லாம் பூர்த்தி செய்கின்றனர்.

முருகனின் தேர் திருவிழா வீதிவலம் வந்து இருப்பிடத்தைச் சேர்ந்ததும் உடனே பச்சை சாத்தி பச்சை வண்ணம் காட்ட தேரினின்றும் இறங்கி ஆரோகணித்து வருகின்ற அற்புதக்காட்சி காணக் கண் கோடி வேண்டும். ஆறுமுகனின் அழகு வார்த்தையில் அடங்காது. அழகே ஓருருவெடுத்தாற் போன்று வரும் முருகனின் அழகுத் திருக்கோலம் தெவிட்டாதினிக்கும் தெய்வீகக் காட்சி. இன்று விழாக்கோலம் பூண்டிருக்கும் நல்லைக்கந்தன் ஆலயத்திற்கு ஒருமுறை சென்று வழிபாடாற்றிட பூர்வஜென்ம புண்ணியஞ் செய்திருக்க வேண்டும்.

தொல்லை வினை தீர்க்கும் நல்லைக் கந்தனைத் தரிசித்துப் பிறவி எடுத்ததன் பயனை பெற்றுய்வோமாக.

நன்றி: சிவநெறிக்கலாநிதி இராசையா ஸ்ரீதரன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

0 கருத்துகள்: